"ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்" - கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, நடிகை அபிராமி பேட்டி
|கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி நான் என நடிகை அபிராமி கூறினார்.
சென்னை,
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஐதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவரை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.
இந்த நிலையில், கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, நடிகை அபிராமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள் தான். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன். கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன்.
கலாஷேத்ரா ஆசிரியர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறியுள்ளார். பேராசிரியர் ஹரி பதமன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறனர். "ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்" என்று கூறினார்.