திருவள்ளூர்
10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொல்லை: பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்கள் அனுப்பிய ஊழியர் கைது
|திருவள்ளூரில் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்த இனிப்பு கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் ஜெயா நகரை சேர்ந்த 32 வயதுடைய பெண்ணின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசியதுடன், அவரது செல்போனிற்கு 100-க்கும் மேற்பட்ட ஆபாச படங்களையும் வீடியோக்களையும் அனுப்பி வந்துள்ளார். அதோடு நிற்காமல் வீடியோகால் செய்தும் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் இது குறித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி ஆகியோர் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகர் தாஸ் மற்றும் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து அந்தப் பெண்ணிற்கு வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது, அது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செல்போனை பயன்படுத்தி வருவதாக காண்பித்தது. இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் விரைந்து சென்று மர்ம நபரை அடையாளம் கண்டு கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
போலீசார் நடத்தி விசாரணையில், பிடிபட்ட நபர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு பகுதியை சேர்ந்த சிவா (வயது 42) என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், திருமணம் ஆகாத அவர் கேட்பாரற்று கிடந்த ஒரு சிம் கார்டை எடுத்து பயன்படுத்தி இது போல 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாசமாக பேசி வீடியோ மற்றும் படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து அநாகரிகமாக நடந்து வந்ததும் உறுதியானது.
இதைத் தொடர்ந்து போலீசார் சிவாவை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.