சென்னை
உறவுக்கு அழைத்து தொல்லை: கணவரின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி - குடிபோதையில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
|தாம்பத்ய உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்ததால் கணவரின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி விஜயா (36). வீட்டு வேலைகள் செய்து வந்தார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இருவரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக தெரிகிறது.
குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 3-ந் தேதி வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்த குமார், மயங்கி விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி விஜயா வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
குமாரின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், குமாரின் மனைவி விஜயாவிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் விஜயா, தனது கணவர் குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் விஜயா அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
குடிப்பழக்கம் உடைய எனது கணவர் குமார், தினமும் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறு செய்தார். சம்பவத்தன்று குடிபோதையில் வந்தவர், என்னை தாம்பத்ய உறவுக்கு வரும்படி அழைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்தார். நான் மறுத்ததால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான், கணவரின் கழுத்தை நெரித்து கீழே தள்ளினேன். அதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக கூறி போலீசாரிடம் நாடகமாடினேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், விஜயாவை கைது செய்தனர். விஜயாவின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வேறு ஒரு நபருடன் விஜயாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
எனவே குமார் கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? இந்த கொலைக்கு விஜயாவுடன் தொடர்பில் உள்ளவரும் சம்பந்தப்பட்டு உள்ளாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.