மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்
|மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் பணியாற்றி, மிக உயர்ந்த பதவியான இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை வகித்து ஆசிரியர் பணிக்கு பெருமை தேடித் தந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம்.
கல்வியின்மை நீங்க வேண்டுமென்ற இலட்சியம், சமூகம் மீதான அக்கறை, கிராமப்புறங்களில் பொருளாதார மற்றும் சுகாதார நிலைகள் உயர வேண்டும் என்ற குறிக்கோள், தன்னலமற்ற சேவை உள்ளிட்டவற்றில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 'ஆசிரியர் தினம்' கொண்டாடப்படுகிறது.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
என்ற வள்ளுவரின் வாய்மொழி கல்வியின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது. நம் நாட்டில் உள்ள அனைவரும் கண்ணுடையராக விளங்கினால் நாடு முன்னேற்றமடைந்து, நாட்டு மக்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றுப் புகழும், இன்பமும் உடையராக இருப்பர் என்பதை மனதில் நிலைநிறுத்தி, "என் கடன் பணி செய்துகிடப்பதே" என்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கிணங்க அழியாச் செல்வமாம் கல்வியை போதிக்கும் பெருமைக்குரியவர்கள் ஆசிரியர் பெருமக்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தொண்டு மனப்பான்மை, ஏழைகளுக்கு உதவுதல், பொது அறிவு, விளையாட்டு என அனைத்தையும் மாணவ, மாணவியருக்கு போதித்து அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதுதான் ஆசிரியர் பணி. இப்படிப்பட்ட உன்னதமான பணியை மேற்கொள்வதற்கு தன்னலமற்ற, தியாக மனப்பான்மை இருந்தால் மட்டும் போதாது, ஆசிரியர் தொழிலை நேசிப்பவராகவும் இருத்தல் வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தி, தன்னலமின்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்கள் பணியை மேற்கொண்டு வருபவர்கள் ஆசிரியர்கள். இந்தப் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும் என்பதே எனது பேரவா.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மனிதர்கள் தமக்கென வாழாமல் பொது நலத்திற்கென வாழ்ந்தால்தான் நாடும் வீடும் சிறப்படையும் என்பதற்கேற்ப, ஏழையெளிய மக்களின் அறியாமையை நீக்கும் பணியினை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ளும் வகையில், மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் ஓயாமல் உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது "ஆசிரியர் தின" நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.