நீலகிரி
கூடலூரில் மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி
|கூடலூரில் மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் நடனமாடி உற்சாகம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி கூடலூரில் மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தொடர் மழை காரணமாக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்து முனை சந்திப்பு பகுதியில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் சாலையில் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியை கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா மற்றும் அலுவலர்கள் தொடங்கி வைத்தனர். ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இசை ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் கலந்துகொண்டு இசைக்கு ஏற்ப பாடினர். மேலும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்தவாறு சாலையில் நடனமாடினர். நேரம் செல்ல, செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது. இதேபோல் பேச்சுப்போட்டி, நடன நாட்டியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் சாலையில் நடனமாடியவாறு இருந்தனர். பின்னர் போலீசார் உத்தரவுக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. முன்னதாக போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.