பெரம்பலூர்
பெரம்பலூரில் இன்று `ஹேப்பி ஸ்ட்ரீட்' கொண்டாட்ட நிகழ்ச்சி
|போலீசார் சார்பில் `ஹேப்பி ஸ்ட்ரீட்' கொண்டாட்ட நிகழ்ச்சி பெரம்பலூரில் இன்று நடக்கிறது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பெரம்பலூர் நகரில் மாவட்ட போலீசார் சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் (மகிழ்ச்சி ஞாயிறு) என்ற நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெங்கடேசபுரத்தில் `ஹேப்பி ஸ்ட்ரீட்' கொண்டாட்ட நிகழ்ச்சி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இதில் போலீசார், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாடலுக்கு ஏற்ப உற்சாகமாய் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் சிறுவர், இளைஞர்களின் தப்பாட்டம், பள்ளி மாணவ-மாணவிகளின் சிலம்பாட்டம், வில்வித்தை, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், போதை பழக்க வழக்கங்களில் அடிமையாவதை தவிர்க்குமாறும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.