ஈரோடு
பிப்ரவரி மாதம் 3-ந்தேதி நடக்கிறதுகோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
|கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி யாகசாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி யாகசாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
கும்பாபிஷேகம்
ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகி விட்டதால், கடந்த 2019-ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக திருப்பணிகளை தொடங்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்பேரில், கோவிலின் பழமைத்தன்மை மாறாமல் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி கஸ்தூரி அரங்கநாதர் சாமி, பரிவார மூர்த்திகள் மற்றும் விமான ராஜ கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது.
யாகசாலை அமைக்கும் பணி
அதைத்தொடர்ந்து, கோவிலுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி, நேற்று கோவிலில் யாக சாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில், கோவில் செயல் அலுவலர் கயல்விழி, அறங்காவலர் குழு தலைவர் செல்வம், கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், தி.மு.க. பகுதி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.