< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில் நடந்தகலவரத்துக்கு பா.ஜ.க.வினர் தான் காரணம்:கலெக்டரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில் நடந்த'கலவரத்துக்கு பா.ஜ.க.வினர் தான் காரணம்':கலெக்டரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்

தினத்தந்தி
|
17 April 2023 12:15 AM IST

பெரியகுளத்தில் நடந்த கலவரத்திற்கு பா.ஜ.க.வினர் தான் காரணம் என்று கலெக்டரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'பெரியகுளத்தில் கடந்த 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் போலீசார் வகுத்து தந்த நேரப்படி அனைத்து கிராமத்தினரும் வரிசையாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். இரவில் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் மாலை அணிவிக்க வந்தபோது தண்டுபாளையம் அருகே பா.ஜ.க.வை சேர்ந்த சில நபர்கள் திட்டமிட்டு மறைந்திருந்து கலவரத்தை ஏற்படுத்த கல் எறிந்து பிரச்சினையை ஏற்படுத்தினர்.

இந்த விழாவினை சீர்குலைக்கும் நோக்கத்தில் பா.ஜ.க.வினர் இருட்டு பகுதியில் மறைந்து இளைஞர்கள் மீது கல் எறிந்து வன்முறையை தூண்டும் விதத்தில் செயல்பட்டனர். அத்தகைய நபர்களையும், வீடியோ பதிவுகள் மூலமாக உண்மையான குற்றவாளிகளையும் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்பில்லாத அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை வேடிக்கை பார்க்க வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்து வருவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே அப்பாவி பொதுமக்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தி வன்முறைக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் முறையான விசாரணை செய்து உண்மை தன்மை அறிந்து, வீடியோ ஆதாரம் மூலம் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்