பெரம்பலூர்
ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
|பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கேக்வெட்டி கொண்டாடினர்.
அனுமன் ஜெயந்தி விழா
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே ஸ்ரீ பூமலை சஞ்சீவிராயர் மலையின் அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் அனுக்ஞை, தன பூஜை, கலச பூஜை, சுதர்சன ஹோமம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், நெய், சந்தனம், குங்குமம், விபூதி உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செந்தூரம் அணிவித்து...
இதேபோல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கோவில் முன்புறம் உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. கோதண்டராமர் சன்னதியில் உள்ள ஆஞ்சநேயருக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகமும், வெண்ணெய் சாற்றி செந்தூரம் அணிவித்து மகா தீபாராதனையும் நடந்தது. அபிஷேக ஆராதனையை கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் நடத்தி வைத்தார்.
இதனை தொடர்ந்து கோவில் முன்புறம் உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு செந்தூரம் மற்றும் வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு வடைமாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் பின்புறம் தெப்பக்குளம் கிழக்குகரையில் அமைந்துள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சன்னதியில் பாதுகா சேவா சமிதி சார்பில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அபிஷேகங்கள் நடந்த பின் வெற்றிலை மாலை, வடைமாலை அணிவித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிறப்பு அபிஷேகம்
பெரம்பலூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி விநாயகர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் நேற்று இரவு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அபிஷேக ஆராதனையை கோவில் அர்ச்சகர் சஞ்சீவிபிரசாத் நடத்தி வைத்தார். அனுமன் ஜெயந்தியையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் பெருமாள் கோவிலில் உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.