< Back
மாநில செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா

தினத்தந்தி
|
24 Dec 2022 12:15 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதல் அனுமனை தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதல் அனுமனை தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

அவதாரம் என்றதும் நம் அனைவரின் மனதில் தோன்றுவது தசாவதாரம் ஆகும். சிவனும், விஷ்ணுவும் பல்வேறு காரணங்களுக்காக பலவித அவதாரங்களை எடுத்துள்ளனர்.. வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவியின் மகனாக மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் பிறந்ததால் அன்றைய தினம் அனுமன் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

அனுமன் பிறந்த நாளை கொண்டாடும் போது தடைகளை உடைக்கும், தோஷங்களை நீக்கும் தன்மை கொண்ட ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று வடைமாலை அணிவித்து பக்தர்கள் வேண்டுவது வழக்கம். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அனுமன்ஜெயந்தி தினம் அனுமன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாலஆஞ்சநேயர் கோவில்

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபால ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு வாலில் சக்தி அதிகம் என்பார்கள். அதற்கேற்ப இந்த ஆஞ்சநேயர் கோவில் மேல்பகுதியில் கோபுர விமானம் இல்லாமல் ஆஞ்சநேயர் வால்சுருட்டி அமர்ந்திருப்பது போல் உள்ளதாலும் பரிவார மூர்த்திகள் இல்லாமல் தனியாக ஆஞ்சநேயர் மட்டுமே உள்ள சிறப்பு சக்தி வாய்ந்த இந்த தலத்தில் அனுமன்ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு பல்வேறு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

அதிகாலை முதலே விஷேச திருமஞ்சன அபிசேகம் நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஸ்ரீபாலஆஞ்சநேயருக்கு வெற்றிலை, துளசி மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு வெண்ணை சாத்தி தொடர்ந்து பல்வேறு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சனியின் பார்வையில் சிக்கும் ராசிக்காரர்கள் அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுவதால் நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சியில் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ள ராசிக்காரர்கள் நேற்று காலையிலேயே ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். அனுமன் ஜெயந்தி அன்று ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் வந்து வழிபட்டனர்.

சேதுபந்தன ஆஞ்சநேயர் கோவில்

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரையில் எழுந்தருளியுள்ள சேதுபந்தன ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு வடைமாலையிட்டு வெண்ணை சாத்தி சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாக்களில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று வழிபட்டனர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள சிரஞ்சீவி தாசபக்த ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு துளசி மாலை மற்றும் வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 16 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி மகாஅபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு பல்வேறு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலாடியில் வரத ஆஞ்சநேயர் கோவிலில் மஞ்சள், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி குங்குமம், ஆரஞ்சு பழம், வெட்டிவேர் உள்ளிட்ட 21 வகையான மூலிகை திரவிய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 508 வடைமாலை, 308 முறுக்கு மாலை, வெற்றிலை மாலை, துளசி, வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக புனித நீர் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கடலாடி சத்திரிய நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஜெயவீரபக்த ஆஞ்சநேயர் கோவில்

இதேபோல் சாயல்குடி நகர யாதவ சபைக்கு பாத்தியப்பட்ட சாயல்குடியில் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கண்ணபிரான் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சாயல்குடி நகர யாதவ மகாசபை மற்றும் யாதவ இளைஞர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நயினார்கோவில் யூனியன் கொளுவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி நாகநாதர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல ராமேசுவரம் பஸ் நிலையத்தில் உள்ள தாசபக்த ஆஞ்சநேயர், ராமேசுவரம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள அத்திமர ஆஞ்சநேயர், தங்கச்சிமடம் பேக்கரும்பில் உள்ள பாலஆஞ்சநேயர் உள்பட பல ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

மேலும் செய்திகள்