கள்ளக்குறிச்சி
2 பவுன் கை சங்கிலி புதுமாப்பிள்ளையிடம் ஒப்படைப்பு
|தியாகதுருகத்தில் ஆட்டோடிரைவர் கண்டெடுத்த 2 பவுன் கை சங்கிலி புதுமாப்பிள்ளையிடம் ஒப்படைப்பு
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல்(வயது 37). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே வந்த போது கீழே 2 பவுன் எடையுள்ள கை சங்கிலி கேட்பாரற்று கிடந்ததை பார்த்தாா். பின்னர் அதை எடுத்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சிங்காரவேல் ஒப்படைத்தார். அவரது நேர்மையை கண்டு போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.
இ்ந்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதன் மூலம் கை சங்கிலியை தவற விட்ட நபர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். விசாரணையில் அவர் ரிஷிவந்தியம் அருகே உள்ள வாணாபுரம் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் ஏழுமலை(28) என்பதும், புதுமாப்பிள்ளையான இவருக்கும், உதயமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மீனா என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி திருமணம் நடைபெற்றதாகவும், இதன் பின்னர் தனது மாமனார் வீட்டிற்கு சென்றபோது கையில் அணிந்திருந்த சங்கிலி தவறி விழுந்ததும் தொியவந்தது. தீவிர விசாரணைக்கு பிறகு இன்ஸ்பெக்டர் சேதுபதி கை சங்கிலியை ஏழுமலையிடம் ஒப்படைத்தார்.