காஞ்சிபுரம்
முன்விரோதத்தில் மாற்றுத்திறனாளி கல்லால் அடித்துக் கொலை - பழ வியாபாரி கைது
|காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக போலீசார் பழ வியாபாரியை கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு எம்.எம் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே மாற்றுத்திறனாளி வாலிபர் இறந்து கிடப்பதாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் இறந்து கிடந்தவர் சின்ன காஞ்சீபுரம் பகுதியைச்சேர்ந்த குமார் (35) என்பது தெரியவந்தது. இவர் மாற்றுத்திறனாளி ஆவாா். மேலும் அந்தப்பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்புக்கேமரா பதிவு காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் காஞ்சீபுரத்தை அடுத்த சேக்காங்குளம் பகுதியைச்சேர்ந்த நாராயணன் (37) என்பவருக்கும், குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. நராரயணன் தள்ளுவண்டியில் பழம் வியாபாரம் செய்துவந்ததாகவும், மாற்றுத் திறனாளியான குமார் கூலித்தொழிலாளியாக பழம் விற்று வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று காஞ்சீபுரம், மேட்டுத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் எதிரே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வாய்த்தகராறு முற்றிய நிலையில் நாராயணன் கீழே இருந்த கல்லை எடுத்து குமார் தலையில் ஓங்கிப் பலமாக அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நாராயணன் தப்பியாடி விட்டதாக போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தப்பியோடிய நாராயணனை போலீசார் கைது செய்தனர்.