திருவள்ளூர்
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாட்டம்
|திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக சிறப்பு பள்ளிகளில் பயிலும் 50 மாற்று திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளோடு சேர்ந்து மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தால் தயார் செய்யப்பட்ட கேக்கினை வெட்டி மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
அதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக மாநில அளவில் நடைபெற்ற தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ள பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரச்சார வாகனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ள கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, முட நீக்க வல்லுநர் ஆஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், மாற்றுத்திறன் கொண்டோருக்கான சிறப்பு பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.