சென்னை
வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
|சென்னையில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
சென்னையில் பகல் வேளையில் கடுமையான வெயிலும், இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் குளிரும் என்று வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
வெயில் கொடுமையால் மக்கள் தவித்து வரும் வேளையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உண்டாகி மழை வாய்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி தமிழ்நாட்டில் நேற்று முதல் 20-ந்தேதி வரையில் இடி-மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி சென்னையில் நேற்று அதிகாலை பொழுது மழைப்பொழிவுடன் விடிந்தது. வெயில் காலமா? மழை காலமா? என்று எண்ணும் அளவுக்கு வானிலை அப்படியே தலைகீழாக மாறி இருந்தது. காலையில் கண் விழித்து பார்த்த மக்களுக்கு மழைப்பொழிவும், இதமான வானிலையும் இன்ப அதிர்ச்சியை அளித்தது.
சிறிது நேர மழைக்கு பின்னர் மீண்டும் வெயில் தலை காட்ட தொடங்கியது. இனி மழை வராது என்ற நம்பிக்கையில் அலுவலகங்களுக்கு குடை, ரெயின் கோர்ட் எடுத்து செல்லாதவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அவ்வப்போது மிதமான மழையும், லேசான வெயிலும், மேகமூட்டமும் என வானிலை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது. சென்னை நகருக்குள் மிதமான மழை பெய்தாலும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. புயல் காலத்தில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்வது போன்று மழைப்பொழிவின் தாக்கம் இருந்தது. தாழ்வான பகுதிகளில் குளம் போன்று மழை தண்ணீர் தேங்கியது. பலத்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி உள்பட பல பகுதிகளில் காலை 10 மணி முதல் சாரல் மழை பெய்தது. மதியம் 12 மணிக்கு பிறகு இடியுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் இந்த மழை நீடித்தது.
வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் பொதுமக்கள் மழைநீரில் விழுந்த ஆலங்கட்டிகளை கையில் ஏந்தி மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த திடீர் மழையால் ஆதம்பாக்கம் கக்கன் நகர் பகுதியில் சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் மழைக்கு பயந்து சாலை ஓரமாக தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கட்டிடங்களில் ஒதுங்கி நின்றனர். கொட்டித்தீர்த்த மழையால் சாலையில் தேங்கிய மழைநீரில் அந்த வாகனங்கள் மிதந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
கீழ்கட்டளை பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மெட்ரோ ரெயில் பணிக்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் சூறை காற்றில் பறந்தது.
கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் பகுதியில் ஆலந்தூரில் இருந்து கிண்டி, அசோக் நகர் பகுதிகளுக்கு செல்லும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்தது. இந்த சுரங்கப்பாதை வழியாக கிண்டி நோக்கி சென்ற கார், மினிவேன் ஆகியவை மழைநீரில் சிக்கி பழுதடைந்து நின்றுவிட்டன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழைநீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுமார் 2 கி.மீ. தூரம் வாகன ஓட்டிகள் சுற்றிச்சென்றனர்.
கிண்டி மடுவின்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் முக்கிய சாலை வண்டிக்காரன் தெரு, சிட்டி லிங்க் ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, தலைமைச்செயலக காலனி ஆகிய பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. கிண்டி வண்டிக்காரன் தெருவில் முழங்கால் வரை தேங்கிய மழைநீரில் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் பகல் வேளையில் வெயில் வாட்டி வதைத்து வந்ததால் வீடுகள், அலுவலகங்களில் மின் விசிறி, ஏ.சி. போன்ற மின்னணு எந்திரங்கள் ஓய்வு இல்லாமல் ஓடின. நேற்று பெய்த மழை வெப்பத்தை தணித்து நகரை குளிர்ச்சியாக்கியதால் மினி விசிறி, ஏ.சி.க்களுக்கு ஓய்வு கிடைத்தது. மழை பெய்த நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப மின்வினியோகம் வழங்கும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோடை வெயில் காலம் தொடங்கும் சமயத்தில் சென்னையில் மழை பெய்ததை வர்ணித்து சமூக வலைத்தளங்களில் 'மீம்ஸ்'களும் அதிகளவில் வெளியாகின.
சென்னையில் பெய்த திடீர் மழை சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் அகம் மகிழ்ந்துள்ளனர்.