< Back
மாநில செய்திகள்
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... உல்லாசத்திற்கு இடையூறு... 4 வயது குழந்தையை அடித்துக்கொன்ற கள்ளக்காதலன்
மாநில செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... உல்லாசத்திற்கு இடையூறு... 4 வயது குழந்தையை அடித்துக்கொன்ற கள்ளக்காதலன்

தினத்தந்தி
|
30 May 2024 8:33 AM IST

குழந்தையை அருகில் வைத்துக்கொண்டே இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 28). இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் இவருக்கும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திவ்யா (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திவ்யாவுக்கு திருமணமாகி 4 வயதில் பழனிவேல்ராஜன் என்ற குழந்தை இருந்தது. திவ்யாவும் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பழக்கம் இவர்களை கள்ளக்காதலர்களாக மாற்றியது. இதையடுத்து திவ்யா தனது 4 வயது மகனை எடுத்துக்கொண்டு பார்த்தசாரதியுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

அதன்பின்னர் கள்ளக்காதலர்கள் இருவரும் தங்களை உண்மையான கணவன்-மனைவி என்று கூறிக்கொண்டு, திருப்பூர் மங்கலத்தை அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சி சிங்கப்பூர் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 2 மாதங்களாக குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி குழந்தை பழனிவேல்ராஜன் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர். அப்போது குழந்தையின் உடம்பில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் அவர்கள் மீது டாக்டர்களுக்கு சந்தேகம் வந்தது. உடனே மங்கலம் போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பழனிவேல் ராஜன் உயிரிழந்தான். இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தசாரதியிடம் விசாரித்தனர். விசாரணையில் பார்த்தசாரதி கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது.

அதாவது பகல் நேரத்தில் குழந்தையை வைத்துக்கொண்டே இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்போது குழந்தை அழுததால் அது அவர்களது உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. இதனால் திவ்யாவின் கள்ளக்காதலன் அந்த பிஞ்சுக்குழந்தையை அடித்து துன்புறுத்திய பின்பு தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

தினமும் குழந்தையை அடித்ததால் குழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்திற்கு அவர்கள் மருந்து கூட போடவில்லை. இதனால் குழந்தை வலி தாங்க முடியாமல் தினமும் தேம்பி தேம்பி அழுதுள்ளது. சம்பவத்தன்று அவர்கள் உல்லாசம் அனுபவிக்கும் போது குழந்தை அழுததால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் அந்த குழந்தையை ஓங்கி அடித்ததில் குழந்தை கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் குழந்தை கீழே விழுந்து விட்டதாக கூறி ஏமாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆனால் குழந்தையின் உடலில் காயம் இருந்ததால் பார்த்தசாரதியின் குட்டு வெளிப்பட்டு விட்டது. குழந்தையை அடிக்காதீர்கள் என்று கூறிய திவ்யாவையும் கள்ளக்காதலன் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கள்ளக்காதலன் பார்த்தசாரதியை கைது செய்தனர். குழந்தை பழனிவேல்ராஜனின் பிரேத பரிசோதனை கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. திவ்யாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் 4 வயது குழந்தையை கள்ளக்காதலன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்