திருவாரூர்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
|ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர்.
குருப்பெயர்ச்சி விழா
திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டும் குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடந்தது.
குருபகவானுக்கு தீபாராதனை
முன்னதாக உலக நன்மை வேண்டி குருபகவானுக்கு 2-வது கால குருபரிகார ஹோமம் நடந்தது. அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ தெட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு சரியாக 11.27 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியடைந்த நேரத்தில் மூலவர் குருபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் வழிபட்டனர்
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர். சிறப்பு ஆராதனைகளை செய்து பக்தர்களுக்கு பிரசாதங்களை ரமேஷ் சுவாமிநாத சிவாச்சாரியார், ஞானஸ்கந்த சிவாச்சாரியார் ஆகியோர் வழங்கினர்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் அரசின் பல்வேறு துறையினரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
குருப்பெயர்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை நாகப்பட்டினம் இணை ஆணையர் ராமு உத்தரவின் பேரில் உதவி ஆணையர் மணவழகன் ஆலோசனைப்படி செயல் அலுவலர் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.