விழுப்புரம்
விழுப்புரத்தில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
|விழுப்புரத்தில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீரவணக்க அஞ்சலி
நாடு முழுவதும் காவல்துறை பணியில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 1959-ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். கடல்மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் இந்த வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தில் 3 போலீசார் உள்பட இந்தியாவில் மொத்தம் 188 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீரவணக்க நாளாக நேற்று அனுசரிக்கப்பட்டது.
துப்பாக்கி குண்டுகள் முழங்க
இதனையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆகியோர் கலந்துகொண்டு பணியின்போது உயிர்நீத்த போலீசாரின் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியின்போது பணிக்காலத்தில் உயிர்நீத்த காவல்துறையினருக்கு ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜோசப் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் அடங்கிய குழுவினால் 21 குண்டுகள் முழங்க வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் நாடு முழுவதும் வீரதீர செயல்களில் ஈடுபட்டும், நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டும் உயிரிழந்த போலீசார்கள் நினைவு கூறப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.