சென்னை
5 வயது சிறுமியின் பையில் துப்பாக்கி தோட்டா - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
|சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த மத்திய அரசு அதிகாரியின் மகளான 5 வயது சிறுமியின் கைப்பையில் இருந்த துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று பெங்களூரு செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெங்களூரு செல்ல தயாராக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய கலால் பிரிவு உயர் அதிகாரியின் குடும்பத்தினரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில், 5 வயது சிறுமி கொண்டு வந்த கைப்பையில் வெடிபொருள் இருப்பதற் கான அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் உஷாரான நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்த அதிகாரியின் குடும்பத்தினரை நிறுத்தி விசாரித்தனர்.
பின்னர், 5 வயது சிறுமி வைத்திருந்த கைப்பையை எடுத்து பிரித்து பார்த்தனா். அதனுள் வெடிக்காத ஒரு துப்பாக்கி தோட்டா இருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து அந்த தோட்டாவை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிகாரியின் பயணத்தை ரத்து செய்து பின் மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனா்.
அதைத்தொடர்ந்து போலீசாா் அதிகாரியிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா சென்றதாகவும், சுற்றுலாவை முடித்து விட்டு துபாய் வழியாக சென்னை வந்து பெங்களூரு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார், இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டு கடற்கரை மணலில் இந்த பொருள் கிடந்ததாகவும், அது துப்பாக்கி தோட்டா என்று தெரியாமல் எடுத்து குழந்தைக்கு விளையாட கொடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் போலீசாா் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தோட்டாவை ஆய்வு செய்தபோது, அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு பெரிய துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய '9 எம்.எம்' ரகம் வகையை சேர்ந்தது என தெரிந்தது. இதையடுத்து துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதிகாரியிடம் எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனா்.