அடுக்குமாடி குடியிருப்புகளின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
|கடந்த 9 மாதங்களில் பத்திரப் பதிவுக் கட்டணம் 244% அதிகரித்து உள்ளது. இது நடுத்தர மக்களால் தாங்க முடியாத உயர்வு ஆகும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை தமிழ்நாடு அரசு பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் பத்திரப்பதிவு செலவு பல மடங்கு அதிகரித்தது மட்டுமின்றி, நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை தமிழக அரசே தகர்த்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாட்டில் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யும் போது, 7% முத்திரைத் தீர்வை, 4% பத்திரப் பதிவுக் கட்டணம் என 11% வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறு கடந்த ஏப்ரல் 1 ஆம் நாள் முதல் பத்திரப்பதிவுக் கட்டணம் 2% குறைக்கப்பட்டு, மொத்தம் 9% மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பு 2017 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தவாறு 33% உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி, புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிப்பதற்கான வல்லுனர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அக்குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி வீடுகளுக்கான வழிகாட்டி மதிப்பை தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை எந்த அடிப்படையும் இல்லாமல், தன்னிச்சையாக பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக சென்னை மயிலாப்பூரில் சாதாரண அடுக்குமாடி வீடுகளுக்கான வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.16,000, சொகுசு அடுக்குமாடி வீடுகளுக்கான மதிப்பு சதுர அடிக்கு ரூ.18,000, அதி சொகுசு வீடுகளுக்கு ரூ.22,000 என மூன்று அடுக்குகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு பகுதிக்கும் 3 அடுக்குகளில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை தெரு வாரியாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது ஒட்டுமொத்த பகுதிக்கும் ஒரே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் பகுதியில் 200 தெருக்கள் இருந்தால், அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வழிகாட்டி மதிப்பு இருக்கும். சில தெருக்களில் நிலம் மற்றும் கட்டிடத்தின் மதிப்பு சதுர அடி ரூ.5000 என்ற அளவுக்குக் கூட இருக்கும். ஆனால், இப்போது அனைத்து தெருக்களுக்கும் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு ரூ.16,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பது மக்களை சுரண்டும் செயல்; இந்த மோசடியை ஏற்க முடியாது.
புதிய வழிகாட்டி மதிப்பை தமிழக அரசு எந்த அடிப்படையில் நிர்ணயித்தது என்பது தெரியவில்லை. மயிலாப்பூரில் இரு இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. அந்த குடியிருப்புகளின் விலை சதுர அடிக்கு ரூ.8571 மட்டும் தான். ஆனால், அந்த விலைக்கே வீடுகளை வாங்க மக்கள் முன்வராத நிலையில், அதை விட இரு மடங்கு தொகையை வழிகாட்டி மதிப்பாக நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
பதிவுக் கட்டணத்தை குறைத்து, வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது, நிலத்திற்கும், கட்டிடத்திற்கும் தனித்தனியாக பதிவு செய்வதை தவிர்த்து ஒரே பதிவு முறையை அறிமுகம் செய்வது என 2 மாற்றங்களை கடந்த 9 மாதங்களில் தமிழக அரசு அறிவித்தது. அவற்றின் மூலம் மறைமுகமாக பத்திரப்பதிவு செலவு அதிகரித்தது. இப்போது எந்த அடிப்படையும் இல்லாமல் அடுக்குமாடி வீடுகளின் வழிகாட்டு மதிப்பை உயர்த்தியிருப்பதன் மூலம் வீடு வாங்க நினைக்கும் மக்கள் மீது இடியை இறக்கியிருக்கிறது தமிழக அரசு.
தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டி மதிப்பு உயர்வால், பத்திரப் பதிவுச் செலவு எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதற்கு சில புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மயிலாப்பூரில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பின் விலை சதுர அடி ரூ.8571. 1000 சதுர அடி கொண்ட குடியிருப்பின் விலை ரூ.85.71 லட்சம். கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வரை இந்த பரப்பளவு கொண்ட வீட்டை பத்திரப்பதிவு செய்ய செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.4.58 லட்சம் மட்டும் தான். கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ரூ.5.99 லட்சமாக அதிகரித்தது. தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள வழிகாட்டி மதிப்பின்படி பத்திர பதிவுக்கு ரூ.11.20 லட்சம் செலவாகும். அதாவது கடந்த 9 மாதங்களில் பத்திரப் பதிவுக் கட்டணம் 244% அதிகரித்து உள்ளது. இது வீட்டின் மதிப்பில் 13.06% ஆகும். இது நடுத்தர மக்களால் தாங்க முடியாத உயர்வு ஆகும்.
வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருப்பது பதிவுக் கட்டணம் அதிகரிப்பதுடன் நின்று விடாது. வழக்கமாக வழிகாட்டி மதிப்பை விட சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும். இப்போது வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் இன்றைய நிலையில் வழிகாட்டி மதிப்பை விட சந்தை மதிப்பு குறைவாக உள்ளது. காலப்போக்கில், வழிகாட்டி மதிப்பை விட சந்தை மதிப்பை கட்டுமான நிறுவனங்கள் அதிகரிக்கக்கூடும். அத்தகைய நிலை உருவானால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு வாங்குவது குறித்து நடுத்தர மக்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதைத்தான் அரசு விரும்புகிறதா? எனத் தெரியவில்லை.
சென்னை போன்ற நகரங்களில் அனைவருக்கும் வீடு கிடைக்கச் செய்வதுதான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். அதற்காக வீடுகளின் விலை குறைவாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஆனால், வழிகாட்டி மதிப்பை விருப்பம் போல உயர்த்தியிருப்பதன் மூலம் வீடுகளின் விலைகள் உயரவே அரசு வழிவகுத்திருக்கிறது. இதன் மூலம் நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை தமிழக அரசு சிதைத்திருக்கிறது. இதுவெல்லாம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரியுமா? அல்லது தெரிந்தே தான் மக்களின் கனவை சிதைக்கும் திட்டத்திற்கு அனுமதித்தாரா? என்பதும் தெரியவில்லை. ஏற்கனவே அரசின் மீது பெரும் வெறுப்பில் இருக்கும் மக்களுக்கு இது கூடுதல் வெறுப்பை ஏற்படுத்தும்.
எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். வீட்டு வசதித்துறையில் சீர்திருத்தம் செய்வதன் மூலம் ஏழை மக்களும் சொந்த வீடு வாங்கும் சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.