< Back
மாநில செய்திகள்
பாலமேடு பகுதியில் கொய்யா கிலோ ரூ.10-விளைச்சல் அதிகரித்தும் விலை சரிவு
மதுரை
மாநில செய்திகள்

பாலமேடு பகுதியில் கொய்யா கிலோ ரூ.10-விளைச்சல் அதிகரித்தும் விலை சரிவு

தினத்தந்தி
|
4 July 2022 8:01 PM GMT

பாலமேடு பகுதியில் கொய்யா பழ விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அலங்காநல்லூர்

பாலமேடு பகுதியில் கொய்யா பழ விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை வீழ்ச்சி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, சுற்றுவட்டார பகுதி கிராமங்களான முடுவார்பட்டி, சரந்தாங்கி, சேந்தமங்கலம், தெத்தூர், வெள்ளையம்பட்டி, எர்ரம்பட்டி, கீழ சின்னம்பட்டி, சுக்காம்பட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கொய்யா, மா, பப்பாளி, சப்போட்டா, நாவல் உள்ளிட்ட பழ வகை மரங்கள் தோப்புகளாக உள்ளன. இதில் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் அதிக அளவில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். ஆண்டிற்கு இருமுறை மட்டும் மகசூல் தரும் இந்த கொய்யா பழங்கள் சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலை தீர்க்கும் சிறந்த மருந்தாகவும் கருதுகின்றனர்.

மதுரை, நத்தம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பாலமேடு அருகில் உள்ள முடுவார்பட்டி பகுதியில் இருந்து கொய்யா பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் கொய்யா உற்பத்தி அதிகரிப்பால் தற்போது கொய்யா பழம் அதிக அளவில் விளைந்துள்ளது. இதன் காரணமாக கொய்யா பழத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கிலோ ரூ.10-க்கு விற்பனை

இதுகுறித்து விவசாயிகள் சரந்தாங்கி முத்தையன் (52), எர்ரம்பட்டி மகாராஜன் (63) ஆகியோர் கூறியதாவது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பழ சந்தைக்கு கொய்யா பழங்கள் அதிக அளவில் வருகிறது. இதனால் கொய்யா பழத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு 30 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு மொத்த விற்பனைக்கு ஒரு கிலோ கொய்யா பழம் ரூ.10 முதல் 15-க்கு மட்டுமே விலைபோகிறது.

மேலும் 30 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூபாய் ரூ.210 முதல் ரூ.300 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இருப்பினும் கொய்யாப்பழத்தின் உற்பத்தி அதிகமானதால் அதனை சந்தைப்படுத்த முடியாமல் தேக்கமடைவதால் குறைந்த விலைக்கு வெளி மாநிலங்களுக்கு ஜூஸ் தயாரிக்கவும், மிட்டாய், கால்நடை தீவன பவுடர், தயாரிக்கவும் அனுப்பப்படுகிறது. இந்தாண்டு விளைச்சல் அதிகம். ஆனால் விலை மிக குறைவு. இதனால் தோட்ட வேலை செய்யும் ஆட்களுக்கும் சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகி உள்ளது. பழங்களை பறித்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் மாடுகளுக்கு உணவுக்காக கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோரிக்கை

கடந்த 2 ஆண்டுகளில் இப்பகுதியில் மட்டும் புதிதாக சுமார் 1 லட்சம் கொய்யா மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நத்தம், மேலூர், பாலமேடு, வாடிப்பட்டி, காஞ்சிரம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து முடுவார்பட்டி பழ சந்தைக்கு தினம்தோறும் அதிக அளவில் பழங்கள் வருவதால் இப்பகுதியில் பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பழ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்