திண்டுக்கல்
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்
|ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று கட்டிட கட்டுமான சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய கட்டிட கட்டுமான சங்கத்தின் மாநில நிர்வாக குழுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா நடந்தது. இதில் புதிய தலைவராக அம்மன் மாரியப்பன், செயலாளராக கிருஷ்ணகுமார், பொருளாளராக ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினராக ராஜேஷ்கண்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாநில தலைவர் ஜெகநாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகம், பாண்டிச்சேரி அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றை சேர்ந்த கட்டிட கட்டுமான சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சந்திரசேகரன், முன்னாள் அகில இந்திய தலைவர் மோகன், உடனடி தலைவர் வேதானந்த், கொடைக்கானல் முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர், மாரியம்மன் கோவில் கமிட்டி தலைவர் முரளி மற்றும் மாரிச்சாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் சங்க தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒப்பந்ததாரர்கள் நிர்ணயத்தை பதிவு செய்வதற்கு பொதுப்பணித்துறை சில தரவுகளை அளித்துள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை குறைத்து மீண்டும் 12 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அனைத்து குவாரிகளையும் உடனடியாக திறக்க வேண்டும். கொடைக்கானல் பகுதிகளில் டி.கே.டி. பட்டா பத்திரப்பதிவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கி பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.