< Back
மாநில செய்திகள்
ரெயில்வே கேட் திடீரென பழுதானதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

ரெயில்வே கேட் திடீரென பழுதானதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
28 April 2023 4:10 PM IST

ரெயில்வே கேட் திடீரென பழுதானதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பேரமனூர் ரெயில்வே கேட் வழியாக சட்டமங்கலம், ஆப்பூர், வளையக்கரணை, சேந்தமங்கலம், வடக்குபட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் வாகனத்தில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சிக்னல் கோளாறு காரணமாக பேரமனூர் ரெயில்வே கேட் பழுதான காரணத்தால் நீண்ட நேரம் திறக்கப்படாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ஜி.எஸ்.டி. சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதேபோல சிங்கப்பெருமாள் கோவில் ரெயில்வே கேட் பழுதானதால் திறக்கச்சூர், ஒரகடம் நோக்கி செல்லும் வாகனங்கள் ரெயில்வே கேட்டில் நீண்ட தூரம் அணிவது ஜி.எஸ்.டி. சாலை வரை நின்றதால் சிங்கப்பெருமாள் கோவில் ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்தில் சிக்கி பல மணி நேரம் தவித்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்