< Back
மாநில செய்திகள்
அச்சகங்களில் பயன்படுத்தும் மைக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உயர்வு
விருதுநகர்
மாநில செய்திகள்

அச்சகங்களில் பயன்படுத்தும் 'மை'க்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உயர்வு

தினத்தந்தி
|
3 July 2022 12:34 AM IST

அச்சகங்களில் பயன்படுத்தும் மைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அச்சு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகாசி,

அச்சகங்களில் பயன்படுத்தும் மைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அச்சு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சில்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டிகரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பான முடிவுகளை எடுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் 47-வது அமர்வு நடைபெற்றது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சில பொருட்களின் ஜி.எஸ்.டி. வரிகள் உயர்த்தப்பட்டது.

இதில் குறிப்பாக அச்சகங்களில் பயன்படுத்தும் மைகளின் வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சிவகாசியில் உள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அச்சகங்கள்

சிவகாசியில் சிறிது, பெரிது என சுமார் 600-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இயங்கி வருகிறது. இங்கு பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், டைரி, அட்டை பெட்டிகள், மருந்து பெட்டிகள் என பல தரப்பு அச்சுப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக காலண்டர் உற்பத்தி இங்கு அதிகம்.

சுமார் 150 அச்சகங்கள் காலண்டர்கள் மட்டும் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக அச்சு சம்பந்தப்பட்ட அனைத்து மூல பொருட்களும் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அச்சகங்களில் பயன்படுத்தப்படும் மைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டதால் அச்சக அதிபர்கள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். கொரோனா காலக்கட்டத்தில் பல அச்சகங்கள் மூடப்பட்ட நிலையில் அதில் இருந்து ஒரு சிலர் மீண்டு வருகிற நிலையில் அச்சகத்தில் பயன்படுத்தும் அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைக்கு அச்சக அதிபர்கள் தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சலுகைகள்

இதுகுறித்து காலண்டர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் கற்பகா ஜெயசங்கர் கூறியதாவது:- காலண்டர் மூலப்பொருட்களுக்கு கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத விலை ஏற்றம் தற்போது உயர்ந்துள்ளது. இந்தநிலையில் வரியும் அதிகப்படுத்தி உள்ளதால் அந்த பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைகிறது. இப்படியே விலையும், வரியும் உயர்ந்து கொண்டே சென்றால் அச்சு தொழில் பெரும் அழிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த தொழில் சிறு-குறு பட்டியலில் உள்ளது. இந்த தொழிலை நம்பி சிவகாசியில் மட்டும் 1 லட்சம் தொழிலாளர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்களும் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் சில சலுகைகளை அச்சு தொழிலுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்