< Back
மாநில செய்திகள்
குரூப்-4 தேர்வு முடிவு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு முடிவு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தினத்தந்தி
|
28 March 2023 1:59 AM IST

குரூப்-4 தேர்வு முடிவு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தகவல் குறித்து டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் செயலரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. இந்த தகவலை சட்ட சபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில் கவன ஈர்ப்பு

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்து கவன ஈர்ப்பு கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நில அளவர் மற்றும் குரூப்-4 தேர்வு முடிவுகள் 2 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இதில் காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

குரூப்-4 முடிவுகளிலும் தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் வரை தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி நடைபெற்ற குரூப்-2 முதன்மை தேர்வின்போது வினாத்தாளில் வரிசை எண் மாறியதால் தேர்வு எழுதுபவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நிகழ்வுகளில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு ஏதேனும் தவறு ஏற்பட்டிருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கவன ஈர்ப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் நாகை மாலிக், பா.ம.க. உறுப்பினர் அருள், இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோரும் பேசினார்கள்.

வேல்முருகன் பேசும்போது, 'கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை வெளிமாநிலத்தவர்களும் எழுதலாம் என்று அனுமதித்தது தான் இதற்கு காரணம்' என்று குற்றம் சாட்டினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேல்முருகனை நோக்கி ஆவேசமாக கத்தினார்கள். பதிலுக்கு அவரும் சப்தம் போட்டார்.

அதன்பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்தார். அந்த கருத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி அந்த கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அமைச்சர் பதில்

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-

இந்த கேள்விக்கு என்னிடம் ஓரளவுக்கு பதில் இருக்கிறது. தற்போது இருக்கிற பதிலை அளித்துவிட்டு இன்னொரு நாளில் சபையில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். இந்த தகவல் நாளிதழ்கள், சமூக வலைத்தளங்களில் வந்தவுடன் நான் இதை மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு அனுப்பி உடனடியாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளிடம் பதில் கேட்டு அனுப்புங்கள் என்று உத்தரவிட்டேன்.

குரூப்-4 தேர்வு குறித்து பொதுவெளியில் வந்த தகவலுக்கும், டி.என்.பி.எஸ்.சி.யிடம் இருந்து எனக்கு வந்த தகவலுக்கும் சம்பந்தமே இல்லை. தேர்வு மையத்தை வைத்துதான் எந்த மையத்தில் எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள் என்று சொல்ல முடியும்.

அந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 8 மையங்கள்தான் இருந்துள்ளது. அதில் முதல் 500 ரேங்குகளில் 27 பேர், முதல் 1,000 ரேங்குகளில் 45 பேர், முதல் 10 ஆயிரம் ரேங்குகளில் 397 பேர். இது தென்காசி மாவட்டத்தில் இருந்து வந்த தேர்வு பட்டியல். தான் நடத்தும் நிறுவனங்களில் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி என்று விளம்பரம் செய்த நபர், பல மாவட்டங்களில் பல பெயர்களில் நிறுவனங்களை நடத்துவதாக கூறியிருக்கிறார். எங்கு பயிற்சி மையம் வைத்துள்ளார். எங்கெல்லாம் தேர்வு எழுதினார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுதான் உண்மையான எண்ணிக்கை ஆகும்.

வேறுபாடு இருக்கிறதா?

குரூப்-4 தேர்வில் ஜூனியர் அசிஸ்டன்ட் மற்றும் டைப்பிஸ்ட்டுக்கும் தேர்வு இருந்தது. தேர்ச்சி பெற்றவர்களின் ரேங்குகளில் மாற்றம் உள்ளதாக கூறுகிறார்கள். ஜூனியர் அசிஸ்டன்ட் தேர்வுக்கு சிறப்பு தகுதிகள் எதுவும் தேவையில்லை. ஆனால் டைப்பிஸ்ட்க்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப்பிங் தெரிய வேண்டும் உள்ளிட்ட சிறப்பு தகுதிகள் தேவை. எனவே இதில் வித்தியாசம் வருவது இயல்புதான்.

சர்வேயர் தேர்வை சுமார் 1,000 பதவி இடத்துக்கு 29 ஆயிரத்து 575 பேர் எழுதினார்கள். காரைக்குடியில் உள்ள ஒரு மையத்தில் முதல் 500 ரேங்கில் 200 பேரும், முதல் 1,000 ரேங்கில் 377 பேரும், முதல் 2 ஆயிரம் ரேங்கில் 615 பேரும் தேர்வு எழுதி தேர்வானவர்கள் என்ற பட்டியல் என்னிடம் இன்று (நேற்று) காலை வந்தது.

இதேபோல் கடந்த 5, 7 ஆண்டுகளில் இந்த மையம் அல்லது வேறு மையத்தில் கூடுதலாக எண்ணிக்கை வந்த வரலாறு இருக்கிறதா? குருப்-2, குருப்-4 தேர்வுக்கு மாவட்ட மையங்கள் எண்ணிக்கையில் வேறுபாடு இருக்கிறதா? என்பதையெல்லாம் ஆராய்ந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் செயலரை கேட்டிருக்கிறேன். அந்த விளக்கம் வரும் போது சபைக்கு அளிக்கிறேன்.

சீர்திருத்தம்

டி.என்.பி.எஸ்.சி.யில் பல வகைகளில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். என்னை பொறுத்தவரையில் நிதியோடு அரசாங்கத்துக்கு மனித வளம் முக்கியம் என்பதற்காகதான் கடந்த நிதிநிலை அறிக்கையில், சீர்திருத்த குழு உருவாக்கப்பட்டு தேர்வு மையங்கள், பயிற்சி எல்லாவற்றிலும் மனித வள மேலாண்மையை சிறப்பிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதனை எல்லோரும் எதிர்த்தார்கள்.

திடீரென்று எனக்கு ஒரு கோப்பு வந்தது. அதில், குரூப்-4 தேர்வை நடத்துவதற்கு கூடுதலாக ரூ.45 கோடி நிதி வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை ஆராய்ந்த போது, 7 ஆயிரம் காலி பணி இடத்துக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் தேர்வு எழுதுவதற்கு 100 கோடி தாள்களை அச்சிட வேண்டும். 2,400 மையங்களில் தேர்வை நடத்த வேண்டும். 7 ஆயிரம் தேர்வு கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் போன்றவை இந்த காலத்துக்கு ஏற்புடையது இல்லை.

24 லட்சம் பேர் தேர்வு எழுதி அதில் 7 ஆயிரம் பேரை எடுப்பதற்கு பல காடுகளின் மரங்களை அழித்து 100 கோடி தாள்களை அச்சடித்து, ரூ.45 கோடி செலவழித்து தேர்வு நடத்துவது இன்றைய தொழில்நுட்ப காலத்தில் சரியான விதிமுறை இல்லை. எனவே தான் நானே முதல் ஆளாக ஆரம்பித்து இந்த முறையை சிறப்பிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பதிலளித்து பேசினார்.

மேலும் செய்திகள்