கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 42,600 பேர் எழுதுகின்றனர் கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தகவல்
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 42,600 பேர் எழுதுகின்றனர் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தொிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தாலுகாக்களில் 143 மையங்களில் 42,600 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வை கண்காணிக்கும் வகையில் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர்கள் 143 பேர், மொபைல் டீம் 32 பேர், பறக்கும் படையினர் 7 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் அனைத்து தேர்வு மையம், வினாத்தாள், விடைத்தாள் எடுத்துச் செல்லும் மொபைல் டீம் மற்றும் கருவூலத்திற்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்கு செல்ல வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு அனுமதி சீட்டினை (நுழைவுச் சீட்டு) தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும். அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும், பாதுகாப்பு பணிகள் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.