< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில்   குரூப்-4 போட்டித்தேர்வை 56,223 பேர் எழுத உள்ளனர்‌  தேர்வாணையக்குழு உறுப்பினர் தகவல்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-4 போட்டித்தேர்வை 56,223 பேர் எழுத உள்ளனர்‌ தேர்வாணையக்குழு உறுப்பினர் தகவல்

தினத்தந்தி
|
22 July 2022 11:34 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-4 போட்டித்தேர்வை 56,223 பேர் எழுத உள்ளதாக தேர்வாணையக்குழு உறுப்பினர் பாலுசாமி கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-4 போட்டித்தேர்வை 56,223 பேர் எழுத உள்ளதாக தேர்வாணையக்குழு உறுப்பினர் பாலுசாமி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பணிகளுக்கான போட்டித்தேர்வின் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்வாணையக்குழு உறுப்பினர் பாலுசாமி தலைமை தாங்கினார். இதில் தேர்வின்போது அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த குறும்பட விளக்க காட்சி ஒளிபரப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பேசிய தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி கூறியதாவது:- தற்போது நடைபெற உள்ள குரூப்-4 போட்டித்தேர்வை இதுவரை இல்லாத அளவில் 22 லட்சம் பேர் எழுத உள்ளனர்‌. நாமக்கல் மாவட்டத்தில் இந்த போட்டித்தேர்வினை 56 ஆயிரத்து 223 பேர் எழுத உள்ளனர். அறை ஒன்றுக்கு 20 பேர் வீதம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

191 தேர்வு மையங்கள்

அதன்படி நாமக்கல் வட்டத்தில் 43 தேர்வு மையங்களில் 13,722 பேரும், ராசிபுரம் வட்டத்தில் 47 தேர்வு மையங்களில் 13,978 பேரும், மோகனூர் வட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 2,239 பேரும், சேந்தமங்கலம் வட்டத்தில் 17 தேர்வு மையங்களில் 4,318 பேரும், திருச்செங்கோடு வட்டத்தில் 42 தேர்வு மையங்களில் 12,048 பேரும், பரமத்திவேலூர் வட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 6,612 பேரும், குமாரபாளையம் வட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 3,306 பேரும் என மொத்தம் 132 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள 191 தேர்வு மையங்களில் 56,223 பேர் போட்டித்தேர்வினை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

குரூப்-4 பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 - க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ளவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே தவறாமல் வந்து விடவேண்டும். தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கண்காணிப்பு

இதில் 20 தேர்வர்களுக்கு தலா ஒரு அறை கண்காணிப்பாளரும், 191 தேர்வு மையங்களிலும் தலா ஒரு முதன்மை கண்காணிப்பாளர்களும், துணை ஆட்சியர்கள் நிலையிலான அலுவலர்கள் கொண்ட 16 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் துணை தாசில்தார் நிலை அலுவலர்கள் கொண்ட 45 நடமாடும் குழுவினர் வினாத்தாள்கள் உள்ளிட்ட தேர்வு பணி பொருட்களை தேர்வுமையங்களுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் விடைத்தாள்களை பெற்று வருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.

தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்ல வசதியாக அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், நடமாடும் குழு அலுவலர்கள், ஆய்வு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்