குரூப் 2 தேர்வு குளறுபடி விவகாரம் - டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரிகள் ஆலோசனை
|தமிழகத்தில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
சென்னை,
தமிழகத்தில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வும், மதியம் பொதுத்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும்186 மையங்களில் தேர்வு நடந்தது.
தேர்வு மையத்துக்கு வந்தபின்னர் கேள்வித்தாள் கொடுக்கும்போது குளறுபடிகள் கண்டறியப்பட்டன. வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் பதிவெண்களின் வரிசையிலும் வித்தியாசம் இருந்தது. இந்தகுளறுபடியால் தேர்வு காலதாமதமாக நடந்தது.
இந்த காலதாமதத்தை பயன்படுத்தி பல இடங்களில் தேர்வர்கள் மொபைல் போன்களை பார்த்தும், பாடப்புத்தகங்களை பார்த்தும் கேள்விக்குறிய பதில்களை தெரிந்து கொண்டு விடைகளை நிரப்பியதாக புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வு தொடர்பாக நடந்த விவகாரங்கள் என்ன? முறைகேடுகள் என்ன? இதில் எத்தனை தேர்வர்கள் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தற்போது டி.என்.பி.எஸ்.சி தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
குரூப் 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி இழப்பு செய்ய டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.