குரூப் -1 தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
|தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த் துறை தான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர்(சப் கலெக்டர்) பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி தேர்வுகளை(குரூப் -1) ஆண்டுக்கு ஒருமுறை நடத்தாதது, வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராகவும், துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவி உயர்வு வழங்காதது ஆகியவை தான் இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த் துறை தான். அத்துறையில் சுமார் 150 உயர்பதவிகள் காலியாக இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
காலியிடங்களில் சுமார் 100 துணை ஆட்சியர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி தேர்வு மூலம் தான் நிரப்ப முடியும் என்பதால், உடனடியாக அத்தேர்வை அறிவிக்க வேண்டும். அதேபோல், தகுதியான வட்டாட்சியர், துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.