< Back
மாநில செய்திகள்
குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு: அச்சரப்பாக்கத்தை சேர்ந்த பெண் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி
சென்னை
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு: அச்சரப்பாக்கத்தை சேர்ந்த பெண் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி

தினத்தந்தி
|
17 July 2022 10:16 AM IST

குரூப்-1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் அச்சரப்பாக்கத்தை சேர்ந்த பெண் மாநில அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.

தமிழ்நாட்டில் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட 66 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வை நடத்தியது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த முதன்மை தேர்வில் 3,104 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வானார்கள். அடுத்தடுத்து நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இதனையடுத்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சி ராவுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த என்ஜினீயர் பழனிசாமி-ரேணுகா தம்பதியின் இளைய மகள் லாவண்யா (வயது 30), 561.75 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். அவர் முதன்மை தேர்வில் 494.25 மதிப்பெண்களும், நேர்முக தேர்வில் 67.50 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

லாவண்யாவுக்கும், ஆவடியை சேர்ந்த மோகன கண்ணனுக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் கூடுதல் சார் பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தான் 2021-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-1 தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதினார். தற்போது வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் லாவண்யா மாநில அளவில் முதலிடம் பிடித்து தேர்வாகியுள்ளார். லாவண்யா-மோகனகண்ணன் தம்பதிக்கு 2 வயதில் அதியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. மாநில அளவில் முதலிடம் பிடித்த லாவண்யாவை அவரது உறவினர்கள், நண்பர்கள் பாராட்டினார்கள்.

லாவண்யாவின் தந்தை பழனிசாமி, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் வந்த லாவண்யாவை ஊழியர்கள் மற்றும் பழனிசாமியின் நண்பர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் லாவண்யா கூறியதாவது:-

அரசு தேர்வு எழுத வேண்டும் என்ற எனது எண்ணத்துக்கு முழு காரணம் எனது தந்தைதான். எனவே எனது தந்தை, இதற்கு உறுதுணையாக இருந்த எனது தாய், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

2015-ம் ஆண்டு இந்த பயணத்தை தொடங்கினேன். முதல் தேர்வில் எனக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது. 2017-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதினேன். அதில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-ம் சுற்றில் தோல்வியடைந்தேன்.

2018-ம் ஆண்டு குரூப்-2 தேர்வு எழுதி அதில் மாவட்ட அளவில் 3-வது இடம் பிடித்தேன். அதோடு நிறுத்தாமல் விடா முயற்சியுடன் குரூப்-1ல் தேர்ச்சி பெற்று பணிக்கு செல்ல வேண்டும் என்று எண்ணத்தில் எனது முழு கவனத்தையும் செலுத்தி படிக்க தொடங்கினேன். அதன்படி விடா முயற்சி, கடின உழைப்பால் தற்போது குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளேன்.

2 வயது மகனுக்கு தாயான நான், படிப்பில் கவனம் செலுத்தும்போது எனது கணவர் குடும்பத்தினர்தான் எனது குழந்தையை கவனித்துகொண்டனர். எனது குழந்தையை ஒரு மாதம் தனியாக விட்டுவிட்டு சென்று தான் நான் படிப்பில் கவனம் செலுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்