தஞ்சாவூர்
தஞ்சைக்கு விற்பனைக்கு வந்த நிலக்கடலை
|வேதாரண்யத்தில் இருந்து தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நிலக்கடலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
வேதாரண்யத்தில் இருந்து தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நிலக்கடலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
வேர்க்கடலை
தஞ்சையில் உள்ள மார்க்கெட்டுகள், கடைகள், தள்ளுவண்டிகளில் நிலக்கடலை விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் வேதாரண்யத்தில் இருந்து தஞ்சைக்குநிலக்கடலைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
அவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள நிலக்கடலை தஞ்சையில் உள்ள முக்கியமான சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தஞ்சை காந்திஜி சாலையோரத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த நிலக்கடலை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
பொதுமக்கள் ஆர்வம்
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த வியாபாரி கூறுகையில்:- பொதுவாக ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் நிலக்கடலைகளின் விற்பனை அதிகளவில் இருக்கும். இதற்காக வேதாரண்யம் பகுதியில் இருந்து நிலக்கடலைகளை கொள்முதல் செய்து காரைக்கால், நாகூர், நாகை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்து சென்று சாலையோரத்தில் குவித்து வைத்து விற்பனை செய்வோம்.
தற்போது தஞ்சைக்கு விற்பனைக்கு எடுத்து வந்து 2-படி ரூ.60-க்கு விற்பனை செய்கிறோம். சாலையோரத்தில் குவித்து வைத்திருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் நின்று ஆர்வமுடன் நிலக்கடலைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை அமோக நடப்பது மட்டுமின்றி நல்ல லாபமும் கிடைக்கிறது என கூறினார்.