நாமக்கல்
நிலக்கடலையில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
|நிலக்கடலையில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தகவல் அளித்துள்ளார்.
பரமத்திவேலூர்:
நிலக்கடலையில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மண் வெப்பநிலை
நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் மேக்ரோபோமினா பேசியோலினா என்ற பூஞ்சாணத்தால் இளம் மற்றும் வளர்ந்த செடிகளில் தோன்றுகிறது. விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணில் இருந்து செடிகளுக்கு பரவுகிறது.
மண்ணில் வெப்ப நிலை அதிகரிக்கும்போது நோய் தாக்குதல் அதிகரிக்கும். நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகி காணப்படும். நோய் தாக்கிய செடிகள் காய்ந்து விடுகிறது.
5 டன் தொழு உரம்
இதனை தடுக்க கோடையில் ஆழமாக உழுதல் வேண்டும். பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். முந்தைய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும். வேர் அழுகல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் கார்பன்டசிம் மருந்தை கலந்து நோய் தாக்கிய செடி மற்றும் அதை சுற்றியுள்ள வேர்ப்பகுதி நனையும்படி மருந்து கலவையை ஊற்ற வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது அதிக சேதாரம் ஏற்படாமல் தடுத்து வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.