திருவள்ளூர்
திருத்தணி பெரியார் நகரில் கல்குவாரிகளில் குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபாடு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
|திருத்தணி பெரியார் நகரில் கல்குவாரிகளில் குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி பெரியார் நகரில் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டது. இந்த பசுமை உரக்குடில் மூலம் திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரமாக மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பசுமை உரக்குடில் அருகே 4-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளது. இந்த கல்குவாரிகளில் எப்போதும் தண்ணீர் உள்ளதால் அருகிலுள்ள பெரியார் நகர் பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பசுமை உரக் குடில்களில் உரம் தயாரிக்க தேவையில்லாத பிளாஸ்டிக் குப்பைகளை அருகிலுள்ள இந்த கல்குவாரிகளில் நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருவதால் மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதித்து வருகிறது. மேலும் குடியிருப்பு வாசிகளின் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் வரும் தண்ணீரில் உப்பு மற்றும் துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரிகளில் நகராட்சி மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.