மதுரை
நிலத்தடி நீர் பிரச்சினை, மின் மோட்டார் பழுது:திருப்பரங்குன்றத்தில் 7 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிப்பு- பொதுமக்கள் அவதி
|திருப்பரங்குன்றம் நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார் பழுதானதால் கடந்த 7 நாட்களாக குடிநீர் சப்ளை இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார் பழுதானதால் கடந்த 7 நாட்களாக குடிநீர் சப்ளை இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குடிநீர் வினியோகம்
திருப்பரங்குன்றம் மக்களுக்காக கடந்த 1977-ம் ஆண்டில் விராட்டிபத்து வைகை படுகையில் அமைக்கப்பட்ட 6 கிணறுகளில் இருந்து மின்மோட்டார்கள் பயன்படுத்தி ராட்சத குழாய் வழியாக பசுமலை-மூலக்கரையில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதை திருப்பரங்குன்றம் கூடல்மலை மேட்டுத் தெருவில் உள்ள ரூ.18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தெருக்குழாய்கள் மூலம் தினமும் 2 வேளை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
இந்தநிலையில் மாடக்குளம் கண்மாய், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயின் உள்பகுதிகளில் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகப்பட்டது. ஆனால் அது நாளடைவில் கைகொடுக்கவில்லை.
மின்மோட்டார் பழுது
இந்தநிலையில் கடந்த 2010-ல் ரூ.12.86 கோடியில் பேரனை சித்தையாபுரம் படுகையில் இருந்து 35 கி.மீ. தூரம் பூமிக்கடியில் பதித்த குழாய்கள் வழியே தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1977-ல் அமைக்கப்பட்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஆனது தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு புதிதாக வாங்கப்பட்ட மின்மோட்டார் பழுதாகி விட்டது. இந்த நிலையில் சித்தையாபுரம் வைகைபடுகையில் நிலத்தடி நீர்தன்மை நாளுக்கு நாள்குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் நீரேற்று நிலையத்தில் பழுதான மின்மோட்டாரை உடனடியாக சரி செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். அதனால் தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு குடம் குடிநீர் ரூ.13
இதனால் 98-வது வார்டில் பெரும்பாலான தெருக்களில் 7 நாட்களாகவும், 97-வது வார்டில் சில தெருக்களில் 5 நாட்களாகவும் குடிநீர் வினியோகம் இல்லை. இதேபோல 94-வது வார்டில் திருநகர் திருமுருகன் காலனி, திருநகர் 3-வது பஸ் நிறுத்தம் உள்ளிட்ட சில பகுதிகள் 95-வது வார்டில் சுந்தர் நகர் பராசக்தி நகர் உள்ளிட்ட சில பகுதிகள் மற்றும் 93-வது வார்டில் இளங்கோ தெரு, கிருஷ்ணாபுரம் தெற்குதெரு உள்ளிட்ட சில பகுதிகள் கடந்த 4 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வினியோகம் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு பெரிய குடம் ரூ.13, சிறிய குடம் ரூ.8 என்று காசு கொடுத்து வாங்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் கூறும்போது:-
பழுதான மின் மோட்டாரை சரி செய்யவும் நிலத்தடி நீர்பிரச்சினையால் சித்தையாபுரத்தில், தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. மதுரைஅரசரடி நீரேற்று நிலையத்தில் இருந்து மாநகராட்சி லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.