செங்கல்பட்டு
ராட்சத அலையில் சிக்கி புதுமாப்பிள்ளை சாவு
|ராட்சத அலையில் சிக்கி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
சுற்றுலா வந்தனர்
காஞ்சீபுரம் எம்.வி.எம்.பி. நகரில் உள்ள சின்ன தெருவை சேர்ந்தவர், பாபு (வயது 30). இவருக்கும், அதே காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 23) என்ற பெண்ணுக்கும் 1 மாதத்திற்கு முன்பு காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
இதில் புது மாப்பிள்ளை பாபுவும், ஜெயலட்சுமியும் காஞ்சீபுரம் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஒன்றாக வேலை செய்து வருகின்றனர். நேற்று புதுமாப்பிள்ளை பாபு தனது மனைவி மற்றும் தன் குடும்பத்தினரை ஒரு வேனில் மாமல்லபுரம் சுற்றுலா அழைத்து வந்தார். புதுமணத்தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்த உடன் இறுதியாக மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு சென்றனர்.
சாவு
அப்போது புதுமாப்பிள்ளை பாபு தனது குடும்பத்தினர் சிலருடன் மாமல்லபுரம் கடலில் புது மனைவி கண் எதிரில் குளித்து கொண்டிருந்தார். அப்போது கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டதால் கரை ஓரத்தில் குளித்து கொண்டிருந்த பாபு ராட்சத அலையில் சிக்கி நடுகடலுக்கு இழுத்து செல்லப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தார். அப்போது ஜெயலட்சுமி அவரது குடும்பத்தினர் கண் முன்னிலையில் அடித்து செல்லப்பட்ட பாபுவை காப்பாற்ற கோரி கதறி அழுதனர். சக சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் போலீசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று மீனவர்கள் உதவியுடன் கடலில் படகில் சென்று பாபுவை தேடினர்.
மாமல்லபுரம் மீனவர் பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கியது. பிறகு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.