திருவள்ளூர்
திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, கடன் உதவி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.
அதை தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
-மேலும் இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்வி திட்டத்திற்கு 2021-2022-ம் கல்வி ஆண்டில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கல்வியை முழுமையாக பெறுவதற்கு ரூ.8 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டிலான சக்கர நாற்காலி, முட நீக்கியல் நாற்காலி, முட நீக்கியல் கருவிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், உதவி இயக்குனர் கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, தனித்துணை கலெக்டர் மதுசூதனன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் காயத்ரி சுப்பிரமணி, அலுவலக மேலாளர் மீனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.