< Back
மாநில செய்திகள்
சென்னம்பட்டி மனுநீதிநாள் முகாமில் ரூ.2 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்
ஈரோடு
மாநில செய்திகள்

சென்னம்பட்டி மனுநீதிநாள் முகாமில் ரூ.2 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்

தினத்தந்தி
|
15 March 2023 8:50 PM GMT

சென்னம்பட்டியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.2 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்.

அம்மாபேட்டை

சென்னம்பட்டியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.2 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்.

நலத்திட்ட உதவிகள்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சென்னம்பட்டி ஊராட்சி சனி சந்தையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, சென்னம்பட்டி ஊராட்சி தலைவர் சித்ரா செல்வன், பாப்பாத்திக்காட்டு புதூர் ஊராட்சி தலைவர் சம்பத், கொமராயனூர் ஊராட்சி தலைவர் விஜயா ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். முகாமில் 214 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 16 லட்சத்து 41ஆயிரத்து 279 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலெக்டர்

பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

மகளிர் திட்டம் மூலம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவது குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பில் இளைஞர்களுக்காக திறன் பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது.

இதனை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டு்ம். இளைஞர்கள், குழந்தைகளை பாதுகாத்திட பொதுமக்கள் முயற்சி மேற்கொள்ளும் போது மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். குழந்தைகள் பாதுகாப்பில் நாம் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதோடு, அவர்களின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்யும்போது வருவாய் அதிகமாகும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் விவசாயம் சார்ந்த பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும்.

நலத்திட்ட உதவிகள் பெறுவது மட்டுமின்றி கல்வி, மருத்துவம், மக்கள் சேவை ஆகியவற்றில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து நன்கு தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தங்களை தயார் படுத்தி அரசு சலுகைகளை பெற முடியும். பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க ஒவ்வொரு தனி மனிதரும் சுகாதாரத்தை பேணிக்காத்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மனுக்கள்

ேமலும் பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

முகாமில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.எஸ்.சரவணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகேசன், அம்மாபேட்டை நில வருவாய் அதிகாரி ரதி, சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி உள்பட அனைத்து துறை அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அந்தியூர் தாசில்தார் தாமோதரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்