< Back
மாநில செய்திகள்
குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர், பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கை மனு; கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கினர்
ஈரோடு
மாநில செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர், பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கை மனு; கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கினர்

தினத்தந்தி
|
13 Jun 2023 2:57 AM IST

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் மற்றும் பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் மற்றும் பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

குடிநீர் வசதி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மொடக்குறிச்சி அருகே உள்ள குரங்கன்பள்ளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "நாங்கள் அவல்பூந்துறை ஊராட்சிக்குட்பட்ட குரங்கன்பள்ளம் பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு 3 மாதங்களாக குடிநீர் குழாய் பழுதாகி கிடக்கிறது. இதை சரிசெய்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு வழங்கி உள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீர் இல்லாமல் பெரிதும் சிரமப்படுகிறோம். எனவே எங்கள் பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மதுவிலக்கு

நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில், "தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுவகைகள் விற்பனையை தடைசெய்ய வேண்டும். சமுதாயத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு மது மூலகாரணமாக உள்ளது. இதன்காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே முழுமையான மதுவிலக்கை தமிழ்நாட்டில் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். மதுவுக்கு பதிலாக தென்னங்கள் இறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

மின்கட்டண உயர்வு

முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "முத்தம்பாளையம் பகுதி 7-க்கும், பாரதிநகருக்கும் ஒரே ஒரு பஸ் மட்டுமே வந்து செல்கிறது. மற்ற பஸ்கள் வருவது இல்லை. இதனால் வெகுதூரம் நடந்து சென்று பஸ் ஏறி இறங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்" என்றனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த மனுவில், "கடந்த ஆண்டு வீட்டு உபயோக மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு வரிகளையும் அரசு உயர்த்தியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் சிறு, குறு தொழில் புரியும் நிறுவனங்களுக்கும் மின் கட்டணம் உயர்த்தி, வைப்பு தொகை 3 மடங்காக உயர்த்தப்பட்டது. எனவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்" என்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "விவசாயிகள் கடந்த 6 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பலர் மயங்கிய நிலையில் உள்ளனர். அவர்களை நேரில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்", என்று கூறினர். அதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

காதுகேட்கும் கருவி

பெருந்துறை தாலுகாவுக்குட்பட்ட விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த பூங்கொடி என்பவர் கொடுத்த மனுவில்,

"எனது மகனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காக்ளியர் இம்ளாண்ட் கருவி பொருத்தப்பட்டது. பின்னர் அவனது காதில் இருந்து சீழ் வடிந்து கொண்டு இருந்தது. இதனால் மீண்டும் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து காதில் இருந்து கருவி அகற்றப்பட்டது. தற்போது காதுகேட்கும் கருவி பொருத்தப்படாததால் அவன் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் இருந்து வருகிறான். இதனால் எனது மகனுக்கு காது கேட்கும் கருவியை வழங்க வேண்டும்" என்றார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 382 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு விைலயில்லா தையல் எந்திரங்களும், ஒரு பயனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளும் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்