நாமக்கல்
சட்டவிரோத சந்துகடைகளை ஒழிக்க வேண்டும்
|நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சந்துகடைகளை ஒழிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- நெல், கரும்பு ஆகியவற்றிற்கு மட்டும் அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. இதர பயிர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு உணவு உற்பத்தி அடிப்படையில் மானியம் வழங்க வேண்டும். சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் பெரிய அளவிலான கரும்பு வெட்டும் எந்திரம் பயன்பாட்டில் உள்ளது. இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த முடியவில்லை. இதனால் தொழிலாளிகளுக்கு அதிகஅளவில் கூலி கொடுக்க வேண்டி உள்ளது. எனவே சிறிய ரக கரும்பு வெட்டும் எந்திரம் மராட்டிய மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் செயல்பாட்டை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல் ஆவினில் பால் விலையை உயர்த்த வேண்டும். காவிரி கரையோர பகுதிகளில் விதிமுறைகளை மீறும் நீரேற்று சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல கோாிக்கைகளை விவசாயிகள் கூறி உள்ளனர்.
சந்துகடை ஒழிக்க வேண்டும்
கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியதாவது:-நான் கடந்த 8 மாதகாலமாக தொடர்ச்சியாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருகிறேன். இதில் முதல்நிலை அலுவலர்கள் தொடர்ச்சியாக பங்கேற்பது இல்லை. இதனால் மொத்தமாக உள்ள 50 பிரச்சினைகளையே விவசாயிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பில் உள்ள அலுவலர்கள் வந்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய பிரச்சினை இதுவரை வரவில்லை. அதற்காக சாராயம் விற்பனை செய்யவில்லை என கூற முடியாது. ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதற்கு போராட்டம் நடத்தினால், அதற்கு அருகில் 20 சந்துகடை வந்து விடுகிறது. சந்து கடைகளில் எல்லாவிதமான மதுபானங்களும் கிடைக்கிறது. எனவே மாவட்டம் முழுவதும் சந்துகடைகளை ஒழிக்க வேண்டும் என்றார்.
பின்ன கலெக்டர் உமா கூறியதாவது:-
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்நிலை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோத மதுபானம் விற்பனையை பொறுத்த வரையில் வாட்ஸ்-அப் எண் கொடுத்து உள்ளோம். அதில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.