ஈரோடு
அந்தியூர் வனத்துறையினரிடம் உள்ள 685 ஏக்கர் வருவாய்த்துறை நிலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
|அந்தியூர் வனத்துறையினரிடம் உள்ள 685 ஏக்கர் வருவாய்த்துறை நிலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்தியூர் வனத்துறையினரிடம் உள்ள 685 ஏக்கர் வருவாய்த்துறை நிலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்தியூர் காவியம் அனைத்து மக்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் தலைவர் செந்தில், செயலாளர் சேகர் மற்றும் காந்தம்பாளையம், அண்ணாமடுவு, பச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
மாத்தூர் கிராமத்தை சுற்றி உள்ள பகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். அந்த பகுதியில் உள்ள 685 ஏக்கர் நிலத்தை பல காலமாக எங்கள் பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்தி, விவசாயம் செய்து வந்தோம். தற்போது அந்த வருவாய்த்துறை நிலத்தை, வனத்துறையினர் பெற்று பாதுகாத்து வருகின்றனர். அங்கு வன விரிவாக்க பணிகளை மேற்கொள்கின்றனர். தற்போது காடாக உள்ள அந்த நிலத்தை எங்களது சங்கத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, பிரித்து வழங்கினால், நாங்கள் விவசாயம் செய்ய ஏதுவாகும். அந்த பகுதியில் வேறு தொழில், பிழைப்புக்கான ஆதாரம் இல்லாததால் அந்த நிலத்தை எங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
213 மனுக்கள்
ஈரோடு நேதாஜி ரோடு, ஆலமரத்து தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'நாங்கள் 80 ஆண்டுகளுக்கு மேலாக ஆலமரத்து தெருவில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறி இருந்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 213 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.