கடலூர்
கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம்
|கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது
கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கடைசி காலாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, 3 சக்கர சைக்கிள், உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 200-க்கும் மேற்பட்ட மனுக்களை கோட்டாட்சியரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, அந்த மனுக்களை பரிசீலனை செய்து அதன் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மண்டல துணை தாசில்தார் அசோகன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஆனந்த் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.