தர்மபுரி
நீண்ட காலமாக வாழும் இடத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதி வழங்க வேண்டும்-குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பழைய தர்மபுரி பகுதி மக்கள் மனு
|நீண்ட காலமாக வாழும் இடத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பழைய தர்மபுரி பகுதி மக்கள் மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 403 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பழைய தர்மபுரி பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடங்களை காலி செய்யும்படி எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வேறு வசிப்பிடம் இல்லை. எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாங்கள் தொடர்ந்து அங்கு வசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றைத் துறை அலுவலகம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பணிபுரியும் இடங்களில் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பாதுகாப்பு பெட்டி வைக்கும் முறை குறித்து கலெக்டர் விளக்கி பேசினார். ஒரு மாத காலத்திற்குள் பெண்கள் பணிபுரியும் அனைத்து அலுவலகங்களிலும் பாதுகாப்பு பெட்டியை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.