< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலைகளில் மீன்பிடிக்க உள்நாட்டு மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

தினத்தந்தி
|
29 Nov 2022 3:39 AM IST

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலைகளில் மீன்பிடிக்க, உள்நாட்டு மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலைகளில் மீன்பிடிக்க, உள்நாட்டு மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இலவச வீடு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பவானி அருகே உள்ள ஒலகடம் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் பலர் கலெக்டர் அலுவலகம் வந்து, ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

நாங்கள் ஒலகடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் வசித்து வருகிறோம். அரசு சார்பில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், எங்களால் அங்கு வீடு கட்ட முடியவில்லை. எனவே எங்களுக்கு இலவசமாக அங்கு வீடு கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

முன்னுரிமை

அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் நடராஜ் மற்றும் உறுப்பினர்கள் கொடுத்திருந்த மனுவில், 'உள்நாட்டு மீனவர்களான நாங்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உள்நாட்டு நீர் நிலைகளில் கடந்த 60 ஆண்டுகளாக மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறோம். நாங்கள் அரசு நிர்ணயிக்கும் குத்தகையை செலுத்தி, மீன் குஞ்சுகள் இருப்பை பாதுகாத்து, பராமரித்து, மீன்பிடிக்கும் தொழில் செய்கிறோம். அந்தியூர் பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளோம். கோர்ட்டு வழிகாட்டுதல்படி, மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்காமல், பொது ஏலம் விடலாம் என கருத்துருவாக்கம் செய்துள்ளது. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுவோம். தற்போது மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி, மீன் குஞ்சுகள் அதிகம் உள்ளன. எனவே மீன் வளத்துறை மீன், மீன் பாசி ஏலத்தை நடத்தி எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

282 மனுக்கள்

சின்னியம்பாளையம் பிரிவு தாசாங்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி சொர்ணம் (வயது 80) என்பவர் கொடுத்திருந்த மனுவில், 'எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் மட்டும் என்னை கவனித்து வருகிறார். அவருக்கு சரியாக வேலையில்லாததால் போதிய வருவாய் இன்றி என்னை பராமரிக்க சிரமப்படுகிறார். எனக்கு உடல் நிலை சரி இல்லாததால், பராமரிப்பு, மருத்துவ செலவு அதிகமாகிறது. எனவே, அதிகாரிகள் விசாரித்து, எனது மற்ற மகன்கள் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

மொத்தம் 282 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்