சுதந்திர தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
|நாட்டையும், நாம் பெற்ற சுதந்திரத்தையும் பேணிக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;
இந்திய ஒன்றியத்தின் 78-ஆவது விடுதலைத் திருநாளில் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாபெரும் அடக்குமுறைகளை எல்லாம் வீரத்தாலும் - தியாகத்தாலும் வீழ்த்திய வரலாற்றின் சாட்சியே இந்நாள்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, தனக்கான சுயாட்சி அத்தியாயத்தை இந்தியா எழுதத் தொடங்கிய இப்பொன்னாளைப் போற்றிடுவோம்.
நாட்டையும், நாம் பெற்ற சுதந்திரத்தையும் பேணிக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முயற்சியையும் முறியடிப்போம்.
அரசியலமைப்பின் துணைகொண்டு 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற நிலையை ஏற்படுத்திடும் வகையில், அயராது உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.