நீலகிரி
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 வழங்க வேண்டும்
|பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 விலை வழங்க வேண்டும் என்று கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 விலை வழங்க வேண்டும் என்று கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
நலத்திட்டங்கள்
காந்தி ஜெயந்தியையொட்டி கோத்தகிரி அருகே நடுஹட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசும்போது,
தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்த அரசு கொண்டு வந்த முன்மாதிரி திட்டங்களில் புதுமை பெண் திட்டமும் ஒன்றாகும். மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவ-மாணவிகளின் எதிர்கால கல்வி குறித்து சிறப்பான ஆலோசனை, வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
கோரிக்கை மனுக்கள்
தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு மருத்துவ பெட்டகங்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் 3 பேருக்கு ரூ.20,200 மதிப்பில் தார்ப்பாலின், மண்புழு உரப்படுக்கை, பழ செடி தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை அமைச்சர், கலெக்டர் பார்வையிட்டனர். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சபை குறித்து பேசும் காணொளி காட்சியை பார்வையிட்டனர். இதில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கிராம சபை கூட்டம்
இதேபோல் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கரை ஊராட்சியில் தலைவர் முருகன், கோடநாடு ஊராட்சியில் தலைவர் சுப்பி காரி, தேனாடு ஊராட்சியில் தலைவர் ஆல்வின், குஞ்சப்பனை ஊராட்சியில் தலைவர் இம்மானுவேல் மணிகண்டன், கொணவக்கரை ஊராட்சியில் தலைவர் ஜெயப்பிரியா, நெடுகுளா ஊராட்சியில் தலைவர் சுகுணா சிவா, ஜக்கனாரை ஊராட்சியில் தலைவர் சுமதி சுரேஷ் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மனுக்கள் அளித்து வலியுறுத்தினர்.