நீலகிரி
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 நிர்ணயம்
|வார விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை சிறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். இவ்வாறு வினியோகம் செய்யப்படும் பச்சை தேயிலைக்கு தொழிற்சாலைகள் மூலம் வார விலை, மாத விலை என்று 2 விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி என 2 நாட்கள் நடைபெறும் தேயிலை ஏலத்தில் விற்பனையாகும் தேயிலைத்தூளின் விலையை அடிப்படையாக கொண்டு வார விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 4 வார தேயிலை ஏல விலையை கணக்கிட்டு மாவட்ட விலை நிர்ணய கமிட்டி மூலம் சராசரி மாவட்ட பச்சை தேயிலை விலை(மாத விலை) நிர்ணயம் செய்யப்படுகிறது. கோத்தகிரி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலும், குன்னூர் தாலுகாவின் ஒரு பகுதி தேயிலை தொழிற்சாலைகளிலும் வாரந்தோறும் சனிக்கிழமை வார விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.14 என வார விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.