திருவாரூர்
பயிர்களின் மகசூலை அதிகரிக்க செய்யும் பசுந்தாள் உரங்கள்
|பயிர்களின் மகசூலை அதிகரிக்க செய்யும் பசுந்தாள் உரங்கள்
பயிர்களின் மகசூலை பசுந்தாள் உரங்கள் அதிகரிக்க செய்கிறது என்று வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி- திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி செல்வமுருகன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பசுந்தாள் உரங்கள்
மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்து அதிக மகசூலை தரவல்ல பசுந்தாள் உரங்களை பயிர் செய்வது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். தக்கைப்பூண்டு, சனப்பை, சீமை அகத்தி, மணிலா அகத்தி, கொளுஞ்சி, பில்லிபசரா, கிளைரிசிடியா போன்ற பசுந்தாள் உரப் பயிர்கள் நெடுங்காலமாக பயிரிடப்பட்டு வந்துள்ளன. தற்போது பசுந்தாள் உரங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து காணப்படுகிறது. செயற்கை உரங்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள உற்பத்தி செலவை குறைத்தல் மற்றும் மண்வளத்தை அதிகரித்து மகசூலை அதிகரிக்கும் பொருட்டு பசுந்தாள் உரப்பயிர்களின் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பசுந்தாள் உரங்கள் மண்ணிற்கு தழைச்சத்து மட்டுமல்லாது மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தையும் சேர்த்து அளித்து, பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியதாக விளங்குகின்றன.
தழைச்சத்து உரம்
அதிகப்படியான செயற்கை உரங்கள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய மண் பிரச்சினைகளை சரி செய்து மண்ணின் வளத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. எனவே விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர்கள் ஏதேனும் ஒன்றை சாகுபடி பயிர் திட்டத்தில் சேர்த்து, அவைகளை உற்பத்தி செய்து பின் அவைகளை பூக்கும் தருணத்தில் வயலில் மடக்கி உழ வேண்டும். பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டு, அதன் வேர் முடிச்சுகளில் உள்ள நன்மை பயக்கக்கூடிய நுண்ணுயிரிகளின் வாயிலாக வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் கிரகித்து, மண்ணை வளப்படுத்துகிறது.
விதைத்த 45-ம் நாளில் பூக்கும் இப்பயிரை மடக்கி உழுவதால் எக்டருக்கு 20 முதல் 25 டன் வரை பசுந்தாள் கிடைக்கின்றது. இதனை மடக்கி உழுது இரண்டாம் போகமாக நெல் சாகுபடி செய்யும் போது எக்டருக்கு 13 முதல் 15 கிலோ தழைச்சத்து உரம் கிடைக்கின்றது. தக்கைப்பூண்டு பசுந்தாள் உரப்பயிரை நெல் சாகுபடிக்கு முன்னும், இரு பருவ நெல் பயிருக்கு இடையில் உள்ள காலங்களிலும் பயிர் செய்து உரமாக பயன்படுத்தலாம். இது ரசாயன உரத்துக்கு இணையான 50 கிலோ தழைச்சத்தை தர வல்லதாக விளங்குகின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.