சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்
|சென்னை மாநகராட்சியின் 2024-2025 -ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்கிறார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மேயராக பதவியேற்ற குறுகிய காலகட்டத்திலேயே 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தார். பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2023-24-ம் ஆண்டுக்கான விரிவான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், 'மக்களை தேடி மேயர்' உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார்.
இதைத்தொடர்ந்து, நாளை(வியாழக்கிழமை) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, 2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளி கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு, புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.