தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
|தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
சிறப்பு பாரம்பரிய ரெயில்
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பிற்பகல் வந்திருந்தார். அங்கு 2ஏ பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த, நீராவி ரெயில் பாரம்பரியத்தை எதிரொலிக்கும் சிறப்பு ரெயிலை அவர் பார்வையிட்டார். பின்னர் அங்கு பத்திரிகையாளர்களுக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி வருமாறு:-
சிறப்பு பாரம்பரியம் என்ற ஒரு புதிய கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீராவி ரெயில் என்ஜினை மையக் கருத்தாக வைத்து இந்த சிறப்பு ரெயில் உருவாக்கப்பட்டுள்ளது. நீராவி ரெயில் என்ஜின் என்பது நம் அனைவரது உணர்விலும் கலந்த ஒன்றாகும். நீராவி ரெயில் என்ஜின் இன்று நம்மிடையே இயக்கத்தில் இல்லை என்றாலும் கூட, அதைப்போலவே தோற்றம் கொண்ட என்ஜினை வடிவமைத்து, ஆனால் அதை மின்சார ரெயிலாக இயக்கலாம் என்று ஆலோசித்தோம்.
இந்த சிறப்பான கருத்தை பிரதமர் நரேந்திர மோடியின் முன் வைத்தோம். அவர், பாரம்பரியத்தையும், வளர்ச்சியையும் சமமாகக் கொண்டு செல்லும் கொள்கை உடையவர். அந்த அடிப்படையில்தான் இந்த சிறப்பு பாரம்பரிய ரெயில் உருவாக்கப்பட்டது. இதை முதலில் சோதனை அளவில் நாங்கள் செயல்படுத்தினாலும், மேலும் பல ரெயில்களை எதிர்காலத்தில் தயாரிப்போம்.
இன்னும் 3 மாதங்களில்...
இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் இந்த ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். கள பரிசோதனையை முடித்து விட்டு பாதுகாப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்றிருக்கிறோம். அதிக தூரத்திற்கு அந்த ரெயிலை இயக்கிப் பார்க்க வேண்டும். அதன் பிறகு அதை மக்களுக்காக இயக்குவோம். இந்த ரெயில் செல்லக்கூடிய பாரம்பரியமிக்க ரெயில் தடங்களை கண்டறிய வேண்டும். அப்படிப்பட்ட தடங்கள் தமிழகத்தில் உள்ளன.
இதுபற்றி தமிழக சுற்றுலாத் துறையுடன் நாங்கள் கலந்தாலோசனை செய்வோம். அதன் பிறகு சிறந்த பாரம்பரியம் மிக்க ரெயில் தடத்தை முடிவு செய்வோம். பின்னர் இந்தியா முழுவதும் இந்த ரெயில் இயக்கப்படும்.
சரக்கு வழித்தடம்
தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் பயனடையும் வகையில், வடக்கு-தெற்கு தனி சரக்கு ரெயில் பாதையை விஜயவாடாவில் இருந்து தூத்துக்குடி வரை விரிவாக்கம் செய்வது பற்றி பரிசீலிப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். சரக்குகளை கையாள்வதை பொறுத்தவரை, தற்போதுள்ள வழித்தடத்தை மேலும் வலுப்படுத்துவது பற்றி இப்போது பரிசீலித்து வருகிறோம்.
இதை விரிவான திட்டங்களுடன் அணுகவுள்ளோம். அதற்காக அதிக சரக்குகள் கையாளப்படும் இடங்கள் எவை? எவையெல்லாம் அதிக சரக்குகள் சென்று சேரும் இடங்கள்? என்பதை கண்டறிய இருக்கிறோம். அந்த வகையில் இந்த பிரச்சினையை அணுகுகிறோம்.
ரெயில்வே பட்ஜெட்
தென் பகுதிக்கு புதிய திட்டங்கள் உண்டா? என்று கேட்டால், 2014-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்திற்கான ரெயில்வே முன்னேற்றத்திற்கான சராசரி பட்ஜெட் ஒதுக்கீடு என்பது ரூ.870 கோடியாக இருந்தது. ஆனால் அது இப்போது ரூ.6,070 கோடியாக உள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் நடந்த மாற்றமாகும். அதனால் நீங்கள் தமிழகத்தில் பல்வேறு ரெயில்வே திட்டங்களை பார்க்க முடிகிறது.
இங்கு அந்த திட்டங்கள் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இங்கு 90 ரெயில் நிலையங்களை உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையங்களாக மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது. எனவே தமிழகத்திற்கான ரெயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு என்பது மிக நன்றாக உள்ளது. இதற்காக நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தாம்பரம் - செங்கல்பட்டு
2009-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட, சென்னை-கடலூர்; தூத்துக்குடி-மதுரை; திண்டிவனம்-நகரி; திண்டிவனம்-திருவண்ணாமலை ஆகிய 4 ரெயில்வே திட்டங்களில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று கூறுகிறீர்கள். இந்த தனிப்பட்ட திட்டங்கள் பற்றிய விளக்கங்களை தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் அளிப்பேன்.
தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் 3-வது ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அந்த பாதை செயல்பட்டு வந்தாலும் போதிய ரெயில் போக்குவரத்து அந்த பாதையில் இல்லை என்பதால் பயணிகள் நெருக்கடி அதிகம் உள்ளது என்று கூறுகிறீர்கள். இனி நடக்க இருக்கும் கூட்டத்தில் அதுபற்றி நான் ஆய்வு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு முன்பு, 'வணக்கம், எப்படி இருக்கீங்க?' என்று தமிழில் பேசி அங்கிருந்த அனைவரையும் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆச்சரியப்படுத்தினார்.
புதிய நிறத்தில் வந்தே பாரத் ரெயில்
இதற்கிடையே சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை தொடர்ந்து, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பெரம்பூர் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
குறிப்பாக ஆரஞ்சு நிறத்தில் தயாரிக்கப்பட்டு வரவுள்ள புதிய வந்தே பாரத் ரெயிலை அவர் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் கலந்துரையாடினார்.