கரூர்
தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை
|அமராவதி அணையில் இருந்து மிக குறைந்த அளவிலான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரூர் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டு காணப்படுகிறது.
அமராவதி ஆறு
கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகளையும், குடிநீர் தேவைகளையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலை தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு.
திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது.
மழை பெய்யும் பட்சத்தில்...
அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும். அப்போது கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்லும். அப்போது தடுப்பணை ரம்மியமாக காட்சி அளிக்கும்.
கடந்த வடகிழக்கு பருவமழையின் போது கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் சென்றது. அப்போது பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை தெரியாத அளவிற்கு தண்ணீர் தடுப்பணையை மூழ்கடுத்து சென்றது. ஆனால் தற்போது அமராவதி அணையில் இருந்து மிக குறைந்த அளவிலான தண்ணீர் ஆற்றிற்கு திறந்து விடப்படுவதால் கரூர் அமராவதி ஆற்றிற்கு தண்ணீர் வருவதற்கு வாய்ப்புகள் குறைந்து உள்ளது. இதனால் கரூர் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.