கடலூர்
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
|பெண்ணாடத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மேள, தாளம் முழங்க அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றுக்கு சென்றார். இந்த ஊர்வலத்தில் பலர் சாமி வேடமணிந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து வெள்ளாற்றில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.
நேர்த்திக்கடன்
இதில் பக்தர்கள் பலர் கோழி, ஆடு ஆகியவற்றை கடித்து ரத்தத்தை உறிஞ்சினர். மேலும் ஆடு, கோழியின் ரத்தத்தை சாதத்தில் கலந்து அதனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் குழந்தை பாக்கியம் இல்லாத பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு ரத்தம் கலந்த சாதத்தை போட்டி போட்டு வாங்கி சாப்பிட்டனர். இது தவிர சாமி வேடம் அணிந்து வந்தவர்களிடம் பலர் முறத்தால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.